Friday, December 27, 2013

நாரதன்:

நாரதன்:

இவர் முந்திய மகா கற்பத்தில் உபவருகன் என்னும் கந்தருவனாக இருந்து பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த யாகத்துக்குப் போய் அங்கே வீணா கானம் செய்து அங்கு வந்திருந்த ஒரு கன்னிகையை வசியஞ் செய்து அவளைப் புணர்ந்து போயினர். 
அஃதுணர்ந்த பிராமணர் அவரைச் சூத்திர வருணத்தில் பிறக்க என்று சபிக்க, அவ்வாறே சூத்திரனாகப் பிறந்து மகாதவஞ் செய்து பிரமமானச புத்திரராகப் பிந்திய கற்பத்தில் பிறந்தவர். 
இவர் கலகப்பிரியர். 
இவர் தக்ஷப்பிரஜாபதி பிள்ளைகள் யாவருக்கும் ஞானோபதேசம் செய்து சிருஷ்டிக்கு பிரதிகூலம் செய்ய, அதுகண்ட தக்ஷன் சந்ததியில்லாதவராய் நிலையற்று அலைக என்று இவரைச் சபித்தான். அதனாலே திரிலோகங்களிலும் செல்பவராயினர். இவர் தான் காதினால் கேட்டவற்றை பிறருக்குச் சொல்லாமல் இருப்பதில்லை. 
தேவசபை, இராஜசபை, வேள்விச்சாலை, முதலிய எல்லாவிடத்தும் தடையின்றிச் செல்லும் சுவாதீனம் உடையவர். தனியிடங்களில் அகப்பட்டுத் திக்கற்று இருப்பவர்களுக்கு வெளிப்பட்டு உபாயமும் பின்நிகழ்வதும் கூறுபவர். 
தூதுபோய்ச் சாதுரியமாகப் பேசுவதிலும் வல்லவர். தரும நூலிலும் சிறந்தவர். வீணையிலே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். 
கிருஷ்ணனது அவதாரத்தைக் கஞ்சனுக்கு உணர்ந்தினவரும், ராமாயணத்தை வால்மீகிக்கு உரைத்தவரும், இந்த தேவ ரிஷியே. இவர் சம்பந்தப்பட்டாத வைதீக சரித்திரங்கள் மிகச்சிலவே.

No comments:

Post a Comment