Friday, December 27, 2013

நீலியின் நீலிக்கண்ணீர்

நீலியின் நீலிக்கண்ணீர்:

பழையனூர் வணிகன் மனைவி. இவள் விவாகமாகிச் (திருமணமாகிச்) சிறிது காலத்தில் இறந்து திருவாலங்காட்டிலே பேயாய் திரிந்தாள். இவள் இறந்தவுடன் இவளின் கணவன் வேறு ஒருத்தியை இரண்டாந்தாரமாக மணந்து மகிழ்ச்சியாக இருந்தான். இறந்த முதல் மனைவியான நீலி இதை தாங்கமுடியாமல் பேயாகித் தவித்தாள்.
ஒருநாள் அவளுடைய நாயகன் அக்காட்டுவழியே தனித்துச் சென்றபோது, இந்த நீலிப்பேய் அவனுடைய இரண்டாம் மனைவியைப் போல வடிவங்கொண்டு ஒரு கள்ளிக் கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே (இடுப்பில்) தாங்கிக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள். 
இதைத் அறிந்துகொண்ட அவளின் கணவன் அவ்வடிவத்தை பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்ச மொழிகளுக்கு இணங்காது ஒடினான். அந்தப் பேயும் “இது முறையோ, இது முறையோ என்று கூவிக்கொண்டும், என்னை காட்டில் விட்டுவிட்டுச் செல்ல நினைத்தீரோ?” என்றும் அழுது கேட்டுக் கொண்டே வந்தது. 
அவ்வாறே பின்தொடர்ந்தே காஞ்சீபுரத்தையடைந்து அங்கே அம்பலத்தில் கூடியிருந்த (மரத்தடியில் கூடியிருந்த பஞ்சாயத்து சபையினரை) வேளாளரிடத்துச் சென்று தனது வழக்கைச் சொல்லிற்று.
அம்பலத்து வேளாளர் இருவர் இந்த வழக்கைக் கேட்டுப் பேயைப் பார்த்து, ‘நீ கூறுவதற்கு சாட்சி யாதென்று’ வினவ, அதற்கு அந்தப் பேய், ‘நான் இக்குழந்தையை விடுக்கின்றேன், அது அப்பா என்றழைத்து இவரின் மடிமீது ஏறும் பாருங்கள்’ என்றாள். 
அப்பிள்ளையும் அவ்வாறே செய்து 'அப்பா' என்றழைத்து அவனிடம் ஒடியது. 
கணவனான வணிகனோ, ‘இது பேய்க்கூத்து’ என்றான். 
இதுகேட்ட வேளாளர், ‘இது உண்மையானால் நாங்கள் பிணையாவோம் (பொறுப்பாய் இருப்போம்); நீயும் இவளும் இந்த அறையினுள் போய் சிறிது நேரம் பேசிவாருங்கள்’ என்றனர்.
வணிகனும் அவர்களின் பேச்சை மறுக்க முடியாமல், அவனும் பேயும் அறைக்குள்ளே சென்றனர். 
அந்தப் பேய், கதவைச் சாத்திக்கொண்டு அவன் உயிரைப் பறித்து மறைந்தது. 
வேளாளர் எண்பதின்மரும் (18 பேரும்) கதவைத் திறந்து பார்த்தபோது, அவன் இறந்ததைக் கண்டு, ‘எங்களின் பேச்சால்தான் உயிர் போனது’ என்று கூறி அவர்களும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர். 
சிவபிரான் அவர்களின் சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும் எழுப்பி வேளாளர் வாக்கைக் காத்தருளினார். 
இவ்விஷயம் தொண்டை மண்டல சதகத்திலும் சேக்கிழார் புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
இதுமுதல், 'ஏமாற்றிக் கண்ணீர்விடும் பெண்களின் கண்ணீரை 'நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்' என்று கூறும் இந்தப் பழமொழியும் வந்தது.

No comments:

Post a Comment