Saturday, January 18, 2014

நரி கதையால் கெட்ட திருதராஷ்டிரன்:

நரி கதையால் கெட்ட திருதராஷ்டிரன்:
திருதராஷ்டிரனின் மந்திரிகளில் ஒருவன் கணிகன். இவன் அதர்மமான ராஜ்ஜிய தந்திர உபதேசம் பண்ணுவதிலும், அக்கிரமமான இழிதொழிலைச் செய்யும்படி தூண்டுவதிலும் வல்லவன்.
இவனின் துஷ்ட உபதேசத்தாலேயே திருதராஷ்டிரன் தன் மைந்தனுடைய வேண்டுகோளுக்கெல்லாம் தலையாட்டினார்.
இவனின் துஷ்ட உபதேசங்கள்;
"ஒருவன் தனக்கு மைந்தனே ஆனாலும், சகோதரனே ஆனாலும், நண்பனே ஆனாலும், தந்தையே ஆனாலும், குருவே ஆனாலும், அவர்கள், தன்னுடைய முன்னேற்றத்துக்கு எதிரியாக இருந்தால், அவர்களை கொன்று ஒழிப்பதில் தவறில்லை" என்ற கெட்ட உபதேசம் செய்தான்.
இவன் திருதராஷ்டிர மன்னருக்கு கூறிய நரிக்கதை;
"தன்னலமும், தந்திரமும் கொண்டவை நரிகள். அதில் ஒரு நரி, தனக்கு நண்பனாக ஒரு புலியையும், ஒரு எலியையும், ஒரு செந்நாயையும், ஒரு கீரியையும், சிநேகமாகக் கொண்டு ஒருகாட்டில் வாழ்ந்து வந்தது.
அக்காட்டிலே ஒரு மான் கூட்டமும் இருந்தது. இந்த மான் கூட்டத்திற்கு அதிலுள்ள ஒரு கலைமான் அரசரான இருந்தது. இந்த கலைமான் மீது இந்த நரிக்கு ஒரு ஆசை இருந்தது. பலநாள் பலவாறு முயன்றும் அதை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே இந்த நரி அதன் சூழ்ச்சியை ஆரம்பித்தது.
ஒருநாள், அந்த நரி, புலியிடம் சென்று "அந்த கலைமானை நீ கூட முயற்சித்து முடியாமல் போய்விட்டதல்லாவா? அதனால் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன் கேள் புலியே! அந்த கலைமான் தூங்கும்போது, நம் நண்பன் எலியை விட்டு அந்த மானின் காலைக் கடித்துவிட்டு வரச் சொல்லுவோம். அவ்வாறு கடித்தால், அந்த கலைமானால் வேகமாக ஓடிவிட முடியாது. நீயும் அதை எளிதில் பாய்ந்து பிடித்து விடலாம். உன் ஆசையும் நிறைவேறும்" என்று தந்திர புத்தியுடன் யோசனை கூறியது.
அதன்படியே எலியை விட்டு மானைக் கடிக்கவைத்து அந்த காயத்தால் ஒடிவிட முடியாத மானை புலி அடித்துக் கொன்றது.
மான் இறந்த விபரம் தெரிந்தவுடன் நரியும் அதன் நண்பர்களும் ஆக ஐந்து பேரும் நமக்கும் இரை கிடைக்கும் என்ற ஆசையில் ஒன்று கூடி நின்றன.
ஆனால், நரி தந்திரம் வேறு மாதிரி இருந்தது. இவர்களைக் கண்டவுடன், "மான் இரையை சாப்பிடுவதற்குமுன், எல்லோரும் குளித்துவிட்டு வர வேண்டும். நான் ஏற்கனவே குளித்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் சென்று ஆற்றில் குளித்துவிட்டு வாருங்கள். அதுவரை நான் இந்த இரைக்கு காவல் இருக்கிறேன்" என்றுகூறி மற்ற நான்கையும் அனுப்பிவிட்டது.
புலி குளித்துவிட்டு முதலில் வந்துவிட்டது. அப்போது நரி ஏதோ சோகத்தில் இருப்பதைப் போன்று முகத்தை வைத்துக் கொண்டது. ஏன் இப்படி இருக்கிறாய் என புலி கேட்டது. அதற்கு தந்திர நரி, "பராக்கிரமமிக்க புலியாரே! எலி உன்னைப்பற்றி என்னிடம் சொல்லிய சொற்கள் உன் காதில் விழுந்தால் நீ இந்த மான் இரையை புசிக்கக்கூட விரும்பமாட்டாய்" என்று  தந்திரமாகக் கூறியது.
என்னைப்பற்றி எலி என்ன கூறியது எனக் கோபமாக புலி கேட்டது,
அதற்கு, "எலி சொல்லிக் கொள்கிறது, முதலில் அதுபோய் மானைக் கடிக்காவிட்டால், இந்த புலிக்கு ஏது இரை? என்று எகத்தாளமாக கூறுகிறது" என்று பொய்யாகப் போட்டுக் கொடுத்தது. இதை கேட்ட புலி, ரோஷம் மிகுந்து, ‘அப்படி ஒரு இரை எனக்குத் தேவையில்லை’ என அந்த இடத்தை விட்டுப் போய்விட்டது.
அதற்குப் பின்னர், குளித்துவிட்டு, எலி வந்து சேர்ந்தது. அதனிடம் இந்த நரி மற்றொரு தந்திரத்தை தயாரித்து, "நான் சொல்வதைக் கேள். இந்த கீரி சொல்கிறது, இந்த மான் இரையை புலி அடித்துக் கொன்றது. அந்த புலி வாயில் உள்ள விஷம் இந்த மான் இரையில் கலந்திருக்கும். அதனால் நான் உண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு கீரி போய்விட்டது" என்று ஒரு பொருத்தமான கதையை நரி, எலியிடம் கூறியது. அவ்வாறு போகும்போது, எலியாகிய உன்னை அதற்கு இரையாகத் தரும்படி என்னிடமே அனுமதி கேட்கிறது. இதைக் கேட்ட எலி, சிறிதுகூட நிற்காமல் அந்த இடத்தை விட்டு ஓடியது.
அதற்குப் பின்னர், குளிக்கப்போன செந்நாய் வந்து சேர்ந்தது. அந்தச் செந்நாயிடம், "நீ எனக்கு நண்பன் மாத்திரமல்ல; ஒருவகையில் உறவினனும் ஆவாய்; அதனால் உன்னைக் காப்பாற்றுவது எனது கடமையும்கூட; புலி உன்னிடத்தில் அதிக கோபமாய் இருக்கிறது; இந்த மான் இரையை புசிப்பதற்காக தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு இங்கே வருவதாகச் சொல்லிச் சென்றுள்ள புலி மீண்டும் இங்கே வரும்; எனவே நீ அப்போது இந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல" என்று நரி கூறியது. இதைக் கேட்ட செந்நாயும் ஒடிப்போனது.
கடைசியாக கீரி குளித்துவிட்டு வந்து சேர்ந்தது. நரி, அந்தக் கீரியைப் பார்த்து, "என்னுடைய உடல் பலத்தினால் நான், புலியையும், எலியையும், செந்நாயையும் வென்று விட்டேன்; அவர்கள் எல்லோரும் என் முன் நிற்க முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையில் இவர்களைக் காட்டிலும் என்னை எதிர்க்க உனக்கு அதிக உடல்பலம் இருந்தால் என்னுடன் சண்டையிட்டு இந்த மான் இரையை நீயே புசித்துக் கொள்ளலாம்" என்று மிகுந்த தைரியம் இருப்பதுபோல கூறியது. இதைக் கேட்ட கீரி, "புலியையே வென்ற நீ, என்னை வெல்வது எளிது" என்று எண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஒடியது.
எல்லோரையும் விரட்டிய நரி, அந்த மான் இரையை தானே தின்று மகிழ்ந்தது.

இந்தக் கதையை திருதராஷ்டிர மன்னனுக்கு கூறி, 'பலமில்லாத போதும், எதிரியை வெல்லலாம்' என்ற துஷ்ட உபதேசத்தை சொல்லி இந்த கணிகன் அவரை நம்ப வைத்தான். இதுபோன்ற பல உபகதைகளை இந்த கணிகன் கூறி, பாண்டவர்கள்மேல், திருதராஷ்டிரனுக்கு பகையை உண்டாக்கினானாம்.

No comments:

Post a Comment