Saturday, July 26, 2014

நினைவுகள்-21

மானநஷ்டம் (Defamation)
மானம் இருந்து அது நஷ்டமானால் அது மானநஷ்டம்.
நல்லவர்களை அவதூறாகப் பேசினால் அது தவறு, குற்றம்.

1. மானம் இல்லாதவரின், மானமில்லாச் செயலைச் சொல்வது, மானநஷ்டத்தில் வராது.
2.நஷ்டத்தை ஏற்படுத்தியவர், தனது மானத்துக்கு நஷ்டம் வந்ததாக சொல்லிக் கொள்ளவும் முடியாது.

மானநஷ்ட வழக்குகளை இந்தியக் கோர்ட்டுகளில் அவ்வளவாக போடுவதில்லை.

தனது மான-மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும்படி பிறர் பேசி இருந்தால், அவர் மீது நஷ்டஈடுகேட்டு சிவில் வழக்குப் போடலாம். IPC Section 500-ன்படி கிரிமினல் அவதூறு வழக்கும் போடலாம்.

கோர்ட், 'அந்த வழக்கில், அவரின் மான-மரியாதை அந்த அவதூறுப் பேச்சால் பறிபோனதா' என்று விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

மான-நஷ்ட/அவதூறு வழக்கில், அவ்வாறு பேசியவர், தன்னை தற்காத்துக் கொள்ள இரண்டு வகை பாதுகாப்பு உண்டு.
1) சட்ட பாதுகாப்புள்ள முழுஉரிமை. (Absolute privilege)
2) அளந்து கொடுத்துள்ள உரிமை. (Qualified privilege).

முதலில் சொன்ன முழுஉரிமையானது (Absolute privilege), சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது. இதை, நீதிபதி, வக்கீல், கோர்ட் சாட்சிகள் இவர்கள் கோர்ட் நடவடிக்கையிலும், எம்.பி, எம்.எல்.. இவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற அரங்கின் நடவடிக்கையிலும் பேசப்படும் பேச்சுக்களை பாதுகாக்கிறது. அதாவது அங்கு பேசிய பேச்சுக்கள் அவதூறு ஆகாது.

இரண்டாவது வகை பாதுகாப்பில் (Qualified privilege) அந்த சொல் உண்மையானதாக இருக்க வேண்டும். பொதுநலனைக் கருதி உண்மையைச் சொல்லி இருந்தால் அது அவதூறு ஆகாது. திருடனை, 'நீ திருடன்' என்று சொல்லி இருந்தால் அது அவதூறு ஆகாது. நல்லவனைத் திருடன் என்று சொல்வது அவதூறு தானே? எனவே இந்த வகையில், அவதூறான வார்த்தையை சொல்லியவர், அந்த சொல் உண்மைதான் என்று அவரே நிரூபிக்க வேண்டும்.

மற்றொன்று:
உலக நடப்புகளை சாதாரணமாக சொல்லி இருப்பார். அவர் யார் மீதும் அவதூறு சொல்லை சொல்லும் எண்ணமில்லை. அவருக்கும் இந்த பாதுகாப்பு உண்டு. அதாவது, 'நாட்டில் லஞ்சம் பெருத்துவிட்டது' என்று கூறி இருந்தால், அவர் யாரையும் குறிவைத்து அவருக்கு அவதூறு உண்டாக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அது ஒரு பொதுவான கருத்து. அவதூறு இல்லை.

ஆனால், நமது ஊர் சட்டங்கள், இதையெல்லாம், நாம் கோர்ட்டில் போய் நாமே நிரூபிக்கச் சொல்கிறது. இது நமக்குத் தேவையா?
நாயை அடிப்பேனேன்.. அதன் ......யை சுமப்பானேன் என்றே பலர் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கின்றனர். சாமானியனுக்கு இந்த சட்டத்தில் தகுந்த பாதுகாப்புக் கொடுத்தால், போக்கிரித்தனத்தை செய்பவன் உண்மையிலேயே தன் வாலைச் சுருட்டிக் கொள்வான்.
சாமானிய மனிதன் மாறத் தேவையில்லை. சட்டம்தான் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். காத்திருப்போம்.

.கொசுறு:
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-ன்படி (IPC) அவதூறான சொல்லை தனிமையில் ஒருவர் நேருக்கு நேர் பேசிக் கொண்டால் அது அவதூறு இல்லை. வேறு மூன்றாம் நபர் இருக்கும்போது, அல்லது செய்தித்தாள்களில், அல்லது மூன்றாவது நபருக்கு தெரியும்படி ஒரு அவதூறு வார்த்தையை பேசி இருந்தால், அது IPC-ப்படி அவதூறே. (அவருக்கே எழுதிய லெட்டரில் அவரைத் திட்டி இருந்தால் அவதூறு இல்லை. அவரைத்திட்டி வேறு ஒருவருக்கு லெட்டர் எழுதியிருக்கக் கூடாது).

நாமும் பார்த்து நடந்துகொள்வோம்.
.

No comments:

Post a Comment