Thursday, August 14, 2014

நினைவுகள்-32


Robin Williams ராபின் வில்லியம்ஸ் - அமெரிக்காவின் மிகப் பிரபலமான சிரிப்பு நடிகர். இந்த ஆகஸ்டு 11ல் இறந்துவிட்டார். இயற்கை மரணம் இல்லை என்றும், சந்தேகத்துக்கிடமாக அவரின் வீட்டிலேயே மரணமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவே சோகத்தில் மூழ்கியது. அவ்வளவுக்கு பிரபலமான சிரிப்பு நடிகர்.

இவர் ஏதோ பிரச்சனையால், 'மன அழுத்தத்தில்' இருந்து வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவருக்கு வயது 63. 1951 ஜூலை 21ல் பிறந்தவர். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர். சினிமாப் படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர்.
எல்லோரையும் சிரிக்க வைத்தஇவரோ, மனஅழுத்தத்தில் இருந்தாராம். அமெரிக்காவில், சினிமா வாழ்க்கையில் இருந்த பலர் இந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளமாம்.

மன அழுத்தம்:
இன்றைய மனிதன், பொதுவாகவே மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவனின் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான ஆள் இல்லை. இவன் வாழ்விலும் வெளிப்படைத் தன்மை இல்லை. அதனால் இவனால் இவனின் பிரச்சனையை வெளியே சொல்லமுடிவதில்லை. பிரச்சனையின் முடிவுக்குப் பயப்படுகிறான். முடிவு, இவனை இவன் முடித்துக் கொள்கிறான்.

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 38,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தற்கொலைக்கான காரணம் Depression-மனஅழுத்தம். அழுத்துவதை வெளியே விட்டால் அழுத்தம் வராது. ஆனால் இவன் வாழ்வின் முன்னேற்றமே, அதை அழுத்தி வைத்ததால்தான். எனவே அதை அவனால் வெளியே விட முடியாது. ரகசியம் உட்பட.... தீர்வு? அவனாகவே அதிலிருந்து வெளியே வர இப்போதே முயற்சிக்க வேண்டும். கடைசி நிமிட முயற்சி, தோல்வியில்தான் முடியும்.

இந்தியாவில்:
நான் பார்த்த அளவில், இங்கு, தற்கொலை செய்து கொண்டவர்கள் கோழைகள் அல்ல. துணிச்சல் மிக்கவர்களும் அதை துணிச்சலுடன் செய்துள்ளார்கள். பலருக்கு யோசனை சொன்னவர்கள், அவர்களுக்கு யோசனை சொல்ல ஆள் வைத்துக் கொள்ளவேவில்லை. தன்னுடைய எல்லாச் செயல்களையும், (நல்லது, கெட்டது, கேவலமானது இவைகள் உட்பட) வேறு ஒரு நம்பிக்கையான நபருடன் பகிர்ந்து கொண்டால், இந்தப் பிரச்சனை தீரும் என்பது எனது அபிப்பிராயம்.
பணம் இல்லை என்று தற்கொலை செய்து கொள்பவர்களைக் காட்டிலும், பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்று (பணம், உறவு, இழிசெயல்) தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். இவர்களாகவே "இவர்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம்" இவர்கள் வாழும் சமூகத்தில் உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது ஒரு சந்தர்பத்தில், இவர்கள் ஒரு இழி செயலைச் செய்யும் போது, அந்த சமூகம் இவரை ஏளனமாக பார்க்குமே, அதை நான் எப்படி எதிர்கொள்வேன் என்று நினைத்துக் கொண்ட கணமே, தற்கொலைதான் முடிவு என இவர்களின் மனம் சொல்லிக் கொடுக்கிறது. இது ஒரு இழிவே இல்லை என ஆறுதல் சொல்லும் ஆள் பக்கத்தில் இல்லாமல் போவதே, அதைத் தடுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம்.

எனவே, இப்போதிருந்தே, நாம் நம் மனதைப் பழக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி? "நாம் ஒன்றும் முழு யோக்கியனில்லை; நாமும் மற்றவரைப் போலவே எல்லாத் தில்லுமுல்லுகளையும் செய்பவன் என்று நமக்குப் பின்னே நம்மை இந்த உலகம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறது; முடிந்தவரை நாம் நம் மனச்சாட்சிப்படி நடப்போம்" என நம்மைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அதுவே நம்மைப் பற்றி நமது சமுதாயமும் நினைத்துக் கொண்டிருப்பதாக நாம் கருதவும் வேண்டும்.

.

No comments:

Post a Comment