Saturday, August 16, 2014

நினைவுகள்-35

தஞ்சம் (அடைக்கலம்)

இந்த வார்த்தையான "அடைக்கலம், தஞ்சம்" என்பன மிகக் கொடூரமான வார்த்தைகள். ஒரு மனிதனின் கடைசி மூச்சின் விநாடியில் கூட அவன் தனது தன்மானத்தை இழந்து இதை கேட்கக் கூடாது. ஆனாலும் இன்று உலகில் அந்த வார்த்தையை உபயோகிக்காதவர்கள் மிகக் குறைவே!

நாடுகடந்து போய், கனடாவில் வசிக்கும் ஒரு பெரியவர் இப்படிச் சொல்லியுள்ளார்,"ஒரு மனிதன், இந்த பூமியில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்துவிடலாம். ஆனால் அவனுக்கென்று ஒரு நாடு இல்லாமல் இருப்பதைப் போல கொடுமையானது வேறு எதுவும் இல்லை." எவ்வளவு வருத்தமான வார்த்தைகள் அது.

கிழக்கு ஐரோப்பாவில் செர்பியா என்று ஒரு நாடு உள்ளது. அங்கு மைனாரிட்டியாக இருப்பவர்கள் 'ரோமோ' என்னும் ஒரு பிரிவினர். இந்த பிரிவைச்  சேர்ந்த ஒருவர் வேறு ஒரு மெஜாரிட்டி கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகளும் உள்ளனர். திடீரென்று இனப் பிரச்சனை வந்தது. இவர் ரோமோ இனம் எனத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் (மனைவியின்) அண்ணன் தம்பிகள் உறவினர்கள் சேர்ந்து கொண்டு இவரை அடித்து உதைத்து விரட்டி விடுகிறார்கள். மனைவியை இழந்து, குழந்தைகளை இழந்து, அந்த நாட்டைவிட்டு வெளியேறி,  திருட்டுத்தனமாக எப்படியோ இங்கிலாந்துக்கு வந்து சேருகிறார்.

இங்கிலாந்தில் அந்த அரசிடம் அடைக்கலம் கேட்டு நிற்கிறார். அடைக்கலச் சட்டம் 2002ன்படி அதைக் கேட்கிறார். (The Nationality, Immigration and Asylum Act 2002). சரியான காரணம் கூறவில்லை என்று அவரின் அடைக்கலக் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது. அதன்மீது டிரிப்யூனல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். அங்கே இவரின் வாதம் என்னவென்றால், "என்னை திரும்பவும் கொசாவா நாட்டுக்கு அனுப்பினால், என் மனைவியின் அண்ணன் தம்பிகள், என்னை அடித்தே கொன்று விடுவார்கள்; நான் பிறந்த மண்ணில் எனக்கு பாதுகாப்பே இல்லை" என்று கதறுகிறார். ஆனால் அரசாங்க வக்கீலோ, "அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லையென்றால், அதேநாட்டில் வேறு ஒரு இடத்தில் வசிக்கலாமே என்றும்; இவரின் நடை, உடை, பாவனைகள் ஏதும், இவர் அந்த இனத்தைச்  சேர்ந்தவர்  என்று சொல்வதற்கு போதுமான ஆதாரமாக இல்லை என்றும்" மறுப்பு தெரிவித்தது. இதனால், அவரின் கோரிக்கை நம்பும்படி இல்லை என்று நிராகரித்து விட்டது ட்ரிப்யூனல் கோர்ட்.

இவ்வாறு நிராகரித்து விட்டாலும், புதிய காரணங்கள் இருந்தால், மறுபடியும் தஞ்சம் கேட்டு மனுச் செய்யலாம் என அங்குள்ள சட்டம் சொல்கிறது.
'"When a human right or asylum claim has been refused or withdrawn or treated as withdrawn under paragraph 333C of these Rules and any appeal relating to that claim is no longer  pending, the decision maker will consider any further submissions and, if rejected, will then determine whether they amount to fresh claim. The submissions will amount to a fresh claim if they are significantly different from the material that has previously been considered."

 எனவே,மறுபடியும் புதிய காரணங்களுடன் மனுச்  செய்கிறார். மறுபடியும் அரசு விசாரிக்கலாமா என்பதில் சட்ட சிக்கல்! மனித உரிமை சட்டங்களின் படி, அரசு மறுபடியும் விசாரிக்கலாம் என்று வாதாடுகின்றனர். அதை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து அப்பீல் கோர்ட் (The Lords of Appeal) அவரின் 2-வது மனுவை மறுபடியும் விசாரிக்கச் சொன்னது.

பாவம்! அவரை 'தஞ்சம்' ஏற்றுக் கொண்டதா? கைவிட்டதா? தெரியவில்லை!!!
என்னே, மனித வாழ்வின்  குரூரம்!!! மனித நாகரீகம் வளர்ந்தும், என்ன பிரயோஜனம்!!!

.

No comments:

Post a Comment