Monday, October 13, 2014

நினைவுகள்-46


சிவன் கழுத்தில் ஒரே மண்டையோடுகளாகத் தொங்கும். கடவுள், மனிதனின் மண்டையோட்டைப் போட்டுக் கொண்டு என்ன செய்வார்? ஏதோ கவுண்டிங்காம்! (Counting of numbers!). எதை எண்ணிக் கொண்டிருக்கிறார். மண்டையோட்டில் எண்ணுவதற்கு என்ன விஷயம் இருக்கிறது?

சிவன் இந்த பிரபஞ்சத்தை தன்னுள் ஒடுங்கிக் கொள்வாராம். அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு புள்ளி அளவுக்கு கொண்டுவந்து இல்லாமல் செய்துவிடுவார்.

பிரம்மா படைக்கும் கடவுள். இவரே இந்த உலகத்தைப் படைத்தவர். மனித உயிர்களையும் இவரே படைக்கிறார். பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு இந்த பிரபஞ்சம் சிவனான தன்னுள் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் அதனுள் ஒடுங்கிவிடுவார். அடுத்த பிரபஞ்சத்தை விஷ்ணு மறுபடியும் உண்டாகுவார். அடுத்த பிரபஞ்சத்தில் வேறு ஒரு பிரம்மா வருவார். அவர் இந்த உலகத்தின் உயிர்களைப் படைப்பார். இப்படியாக படைக்கும் தொழிலை யுகம், யுகமாக ஒவ்வொரு பிரம்மா செய்து வருவார். ஒவ்வொரு பிரம்மாவும் அவர் பிரபஞ்சமும் சிவனுக்குள் ஒடுங்கும்போது அந்த பிரம்மாவின் மண்டையோட்டை சிவன் எடுத்து மலையாகப் போட்டுக் கொள்கிறார். அடுத்த பிரம்மா ஒடுங்கும்போதும் அவரின் மண்டையோட்டையும் மாலையாகப் போட்டுக் கொள்வார். இவ்வாறு ஒவ்வொரு பிரம்மாவின் மண்டையோடும் சிவனின் கழுத்தில் மாலையாக இருக்கும். எத்தனை யுகங்கள் ஒடுங்கின என்ற எண்ணிக்கைக்காகவோ?

எத்தனை பிரபஞ்சத்தை ஏற்படுத்தி அழித்தோம் என சிவன், சுவற்றில் கரிக்கோடு போட்டு கணக்கு வைத்துக் கொள்கிறார். சிவனுக்கு மறந்து விடும் அல்லவா! இது பழைய கதை. இப்போது ipad வைத்திருப்பார்!

பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவர். இந்த பிரபஞ்சத்தையே நான்தான் படைக்கிறேன் என்று ஒருசமயம் அகங்காரம் கொண்டு சிவனை மதிக்காமல் இருந்தாராம். எனவே சிவன் கோபம் கொண்டு வைரவக் கடவுளைத் தோற்றுவித்து ஏவிவிட்டாராம். அவர் சென்று, பிரம்மாவின் ஒரு தலையை வெட்டிவிட்டார். நான்கு முகம் மட்டும் இருப்பதால் பிரம்மாவை  'நான்முகன்' என்றும் அழைக்கின்றனர்.

சிவனின் மகன் சுப்பிரமணியக் கடவுள், ஒருமுறை பிரம்மா, படைக்கும் மந்திரத்தை சொல்ல மறந்துவிட்டதால், அவரைச் சிறையிலிட்டு, சுப்பிரமணியக் கடவுளே கொஞ்சநாள் படைக்கும் தொழிலைச் செய்தார் என்பர். (இது கந்தபுராணக் கதை).

பிரம்மா, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர் என்பர்.
பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
பிரம்மா, சிவனை வேண்டித் தவம் செய்து சிவனையே மகனாகப் பெற்றார் என்றும் சொல்வர்.

தானே தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவரை நாம் (மனிதன்) மதிக்க மாட்டோம். நம்மை அழித்துவிடுவார் என்பவரைப் பார்த்து ‘அண்ணே!’ என்று வணக்கம் செய்வோம். நம்மை வாழவைப்பவரைப் பார்த்து சிரித்து வணங்குவோம். இந்த இரண்டையும் சிவனும், விஷ்ணுவும் செய்வார்கள். எனவே அவர்களை நாம் மிகவும் பயத்துடன் மதிக்கிறோம். பிரம்மா படைத்துவிட்டு சென்றுவிடுவார். எனவே அவரால் மனிதனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவே பிரம்மாவை நாம் மதிக்க மாட்டோம். அவருக்கு கோயில்களே அரிது. கோயில்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மனிதவர்க்கத்தில்கூட, ஆக்கத் தெரிந்தவன், அழிக்கத்தெரிந்தவன் என இருவரை மட்டுமே மனிதனும் மதிக்கிறான். எனவே நாம் ஒன்று ஆக்குபவனாக இருக்க வேண்டும். அல்லது அழிப்பவனாக இருக்க வேண்டும்.
.




No comments:

Post a Comment