Tuesday, December 8, 2015

Indian Citizen

இந்திய குடிமகன்

இந்திய அரசியலமைப்பு சட்டமும், இந்திய சிட்டிசன் சட்டமும் இந்திய குடிமகன் யார் என்று சொல்கிறது;

இந்திய அரசிலமைப்பு சட்டம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 5 முதல் 11 வரை யார் யார் இந்திய சிட்டிசன் (இந்திய குடிமகன்) என்று சொல்கிறது;

ஆர்டிகிள்-5: (இந்தியாவில் பிறந்தவர்கள்)
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரும்போது. யாரெல்லாம் இந்தியாவில் பிறந்திருந்தார்களோ அவர்கள் இந்திய குடிமகன்கள்; அல்லது
(2) அவர்களின் பெற்றோர்களில் ஒருவராவது இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் இந்திய குடிமகன்கள்; அல்லது
(3) இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து, இந்தியாவில் யார் வசித்தாலும் அவரும் இந்திய குடிமகனே.

ஆர்டிகிள்-6: (பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்);
(1) ஏற்கனே இந்தியாவில் பிறந்தவர், அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன்கள் ஏற்கனவே இந்தியாவில் பிறந்தவர்கள், இவர்களில் யாராவது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களும் இந்திய குடிமகன்களே.
(2) 1947 ஜூலை 17 லிருந்து (பாகிஸ்தானிலிருந்து வந்து) இந்தியாவுக்குள் வசிப்பவர் இந்திய குடிமகனே.
(3) இந்த தேதிக்கு பின், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்து, தங்களை இந்திய குடிமகன் என்று பதிவு செய்து கொண்டவர்களும் இந்திய குடிமகன்களே.

ஆர்டிகிள்-7: (இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு போனவர்கள்):
1947 மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் இந்தியாவைவிட்டு, பாகிஸ்தானுக்கு போனவர்கள், இந்திய குடிமகன்கள் என்றே கருதப்படுவர்; (மறுபடியும் இந்தியாவில் மறு குடியேறும் எண்ணத்துடன் போனவர்கள்);

ஆர்டிகிள்-8; (வெளிநாடுகளில் வசிப்பவர்கள்);
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்களை இந்தியக் குடிமகன்கள் என்று அங்குள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்து கொண்டவர்கள் அனைவரும் இந்திய குடிமகன்களே. (அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன் அவ்வாறு பதிவு செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளும் இந்திய குடிமகன்களே.)

ஆர்டிகிள்-9: (வேறு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால் அவர் இந்திய குடிமகன் அல்ல):

ஆர்டிகிள்-10: (இந்திய குடியுரிமை, இந்திய பார்லிமெண்டின் சட்டத்துக்கு உட்பட்டது)
இந்திய குடிமகன் என்பது, மேலே சொன்னவர்கள்தான் என்றாலும், இந்திய பார்லிமெண்ட் இயற்றும் சட்டங்களுக்கும் உட்பட்டது; (இந்திய சிட்டிசன்ஷிப் சட்டம் 1955க்கும் உட்பட்டதுதான் என்று விளங்கிக் கொள்வோம்).

ஆர்டிகிள்-11; பார்லிமெண்டின் அதிகாரம்;
இந்திய பார்லிமெண்ட் தனது அதிகாரத்தை உபயோகித்து, இந்திய குடியுரிமையை ரத்து செய்வதும், புதிய குடியுரிமையை வழங்குவதுமான அதிகாரம் உடையது.

இந்திய சிட்டிசன் சட்டம்
The Citizenship Act 1955.
இந்த சிட்டிசன்ஷிப் சட்டம் 1955 என்ற ஆரம்ப சட்டமானது, பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது; அவைகள் --
1)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 1986;2)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 1992;3)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 2003;4)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 2005;
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகிள்-9ன்படி ஒரு இந்தியன் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் இந்திய குடிமகன் அல்ல; அவர் இந்திய பாஸ்போர்டை வைத்திருக்க கூடாது; உடனடியாக சரண்டர் செய்துவிட வேண்டும்;

சில நாடுகள் (அமெரிக்கா போன்றவை) தன் மண்ணில் பிறந்தவர்களை இந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்கிறது; இதை jus soli அல்லது right of the soil என்று சொல்கிறார்கள்; இந்த மண்ணில் பிறந்தவன், இந்த மண்ணைச் சேர்ந்தவன் என்ற கொள்கை; (அமெரிக்காவின் கொள்கை இது);
மற்ற சில நாடுகள் (இந்தியா உட்பட) இரத்த உறவில்தான் குடிமகனாக இருக்க முடியும்; இந்திய குடிமகனின் மகன் இந்திய குடிமகன் ஆவான்; இதை jus sanguinis அல்லது right of blood என்கிறார்கள்;

சிட்டிசன்ஷிப் ரிஜிஸ்டிரேஷன்;
இந்தியக் குடிமகனாக பதிவு செய்து கொண்டும் குடிமகன் ஆகலாம்; இந்தியாவில் தொடர்ந்து ஆறு வருடங்களாக வாழும் வேறு நாட்டை சேர்ந்தவர், இந்தியாராக விரும்பினால் பதிவு செய்து கொண்டு இந்திய குடிமகன் ஆகலாம்;

திருமண உறவு மூலம் இந்திய குடிமகன் ஆகலாம்;
இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டு, இந்தியாவில் ஆறு வருடங்கள் வாழ்ந்தால், இந்திய குடிமகனாக ஆக முடியும்;
இந்திய குடிமகனின் மைனர் குழந்தைகள் இந்திய குடிமகன்களே;

இரண்டு வகை சிட்டிசன்ஷிப் ஆக இருக்க முடியுமா?
பொதுவாக இருக்க முடியாது; இந்திய குடிமகனாக இருப்பவர், வேறுஒரு நாட்டின் குடிமகனாகவும் இருக்க முடியாது;

ஆனால், 2005ம் ஆண்டு சிட்டிசன்ஷிப் திருத்த சட்டத்தின்படி, ஒரு புதிய முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது; OCI என்பது Overseas Citizenship of India. இதன்படி, அமெரிக்காவில் உள்ள ஒரு இந்தியருக்கு பிறந்த குழந்தை, அந்த நாட்டு சட்டப்படி அமெரிக்க குடிமகன் ஆகிவிடுகிறது; எனவே அவரின் பெற்றோர், அந்த குழந்தையை இந்தியாவுக்கு கூட்டிக் கொண்டுவர நினைத்தால், விசா பெற வேண்டும்; எனவே அந்த குழந்தைக்கு நிரந்தர விசா உரிமை கொடுத்து அதன்படி ஓசிஐ பாஸ்போர்ட் வழங்கி உள்ளது; இது உண்மையில் இந்திய பாஸ்போர்ட் போன்றது இல்லை; வாழ்நாள் விசா போன்ற உரிமை மட்டுமே;
**

No comments:

Post a Comment