Saturday, January 2, 2016

அபிஞாந சகுந்தலா

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான "வம்சவிருத்தி" நூலுக்கு எஸ்.பொ அவர்கள் எழுதிய "முன்னீடு" வார்த்தைகளில் ஒரு பகுதி தான் இது;

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஆங்கில நூலிலே (Getting to know visual basic procedures - an introduction to macro language) வரும் பகுதி ஒன்று மனசிலே மின்னல் சொடுக்கின்றது; 
The King is seated on the golden throne. Shakuntala raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The earth stands still. And then in a clear voice she says: 'My son, make your obeisance to the King, your father'.They are direct, simple and precise, without waste. A good macro should be like that.....விரயமற்ற, நேரான-எளிமையான,-திட்டமான சொல் திறன்! கம்யூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார்; படைப்பாளியின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை; அவனுடைய தேடல்களுக்கு அந்தமும் இல்லை; 
தேடல் அற்புதமான அநுபவமே! தொலைந்து போன இனத்துவ கௌரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி நான்; தொலைந்து போன நினைவுப் பொருள்களின் தேடலும், காவியமயானது; அல்லையேல், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புத்தினால் உலக மஹாகவியாக உயர்ந்த காளிதாஸனின் "அபிஞாந சகுந்தலா" உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா? அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் சாந்திப் புதல்வியாய், துறவியின் பர்ணசாலைச் சூழலிலே செப்பம்; விண்ணையும் மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மன அமைதி; வாழ்க்கையின் தலையாய இலட்சியம்; -- எனப் பல சுருதிகளாய் இந்நாடக்காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும்; மனிதம் பற்றி தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய் அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமையான உவமைப் பொருத்தங்களுடன் நிறுவும் காளிதாஸனின் சிருஷ்டி நுட்பம் ஓர் ஆதர்ஷம்; சேக்ஸ்பியரின் படைப்பு ஓர்மத்துக்குத் துதிபாடுதல் வஞ்சகமற்ற இலக்கிய நயப்பு என்று ஞானப் பகிர்வினை அகலித்துக் கொண்டு, காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நித்தித்தல் ஞான அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங்கண்டு, அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரத்துவத்தினையும் அருளின எனப் பூரித்து என வசப்படுதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கும் உகந்ததுஇலக்கிய பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது; விஞ்ஞானம் பற்றிய, புதுப்புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப்பதுடன், வாழ்க்கையின் சௌரியங்களைப் பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை; இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால், இன்னொருவன்; அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன் இல்லாவிட்டால் இன்னொருவன்; வான் பறப்பிலே ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டார்கள், அவ்வளவுதான்; ஆனால், காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதாவளப்படுத்தும் அபிஞாந சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல; இலக்கிய ஞானியின் படைப்பாற்றல், பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக்கும் உட்பட்ட போதிலும், சில வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப்பாளின் தனித்துவ ஆளுமை என்கிற ஓர்மை அவனுக்கே உரியது; அந்த ஓர்மத்தை வாலாயபபடுத்துதலும், அதன் உபாசகனாய் உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும்; மதத்துக்கு அநுஷ்டானங்கள் மட்டமல்ல, வெறியும் உண்டு.........

(நன்றி - எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான "வம்சவிருத்தி")

No comments:

Post a Comment