Monday, January 4, 2016

ரகுவம்சம்

ரகுவம்சம் 

இரகு வம்ச சரிதாமிர்தம் என்பது ரகு மகா ராஜாவின் மரபில் பிறந்த அரசர் சரிதமாகிய அமிர்தம் என விரித்துக் கூறப்படும்; ரகு என்பவன் திலீபன் என்பவனுக்கு புதல்வனாய் தன் மரபிலே பின் வருவோர் எல்லாம் தன் பெயரோடு விளங்க நின்ற தனி முதல்வன்; ரகு என்பது கலைக் கடலையும் பாகைக் கடலையும் கடக்கவல்லவன் என்னும் காரணம் பற்றி வந்த பெயர்;

தெட்ட மெய்த்தவப் பயச் செல்வற்கவ்வயின்
மட்டிலகலைக்கடறனையும் வாளமர்
முட்டிய பகையையு முடிவுகாண்பனென்
றிட்டன ரொரு பெயரி ரகுவென்னவே. -- இரகுவம்சம். 

வம்சம் என்றால் மரபு; சரிதம் என்றால் கதை; இரகுவை வான்மீகி ராமாயணம் ககுத்தன் மகன் என்று கூறும்; இந்த வான்மீகி ராமாயணமும் பிறவும் தத்திதப் பெயரால் வழங்கப்படும்; இராகவர் என்றால் இரகுவின் மரபில் பிறந்தோர்;

இரகுவின் மரபிலே பிறந்த அரசர் சரிதங்களை காளிதாச மகாகவி ஒரு காவியமாக அமைத்துப் பாடி இருக்கின்றார்; அதன் பெயர் இரகுவம்சம்; இந்த இரகுவம்சம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்த்து காவிய நடையாக பாடப்பட்டிருக்கிறது; அதனைப் பாடியவர் யாழ்பாணத்தில் அரசராய் இருந்த பரராச சேகர மகாராசாவின் மருகர் அரசகேசரி என்பவர்;

இரகு வம்சத்தில் திலீப மகாராஜன் புத்திரர் இன்றி குலகுருவாகிய வசிட்ட முனிவர் கூறியபடி காமதேனுவை வழிபட்டு இரகு என்னும் புத்திரனை பெற்று கொண்ட கதையும் இரகு என்பவன் யாகக் குதிரையை காவல் புரிகையில் வந்து கவர்ந்த இந்திரனோடு போராடி வென்ற கதையும் திக்குகளை வென்று பொரூளீட்டி விச்சுவசித்து என்னும் யாகம் செய்த கதையும் கௌற்ச முனிவர்க்கு பதினாலு கோடி பொன்கொடுத்த கதையும் அவன் மகன் அயன் என்பவன் விதர்ப்ப தேச அரசன் புதல்வி இந்துமதியை சுயம்வர சபையிற் போய் வரிக்கப் பஎற்று மணம்புணர்ந்த கதையும் அயன் மகனாகிய தசரதன் காட்டிற்கு போய் வேட்டையாடி முனிபுதல்வன் ஒருவனை கொன்று சாபம் பெற்ற கதையும் தசரதன் மகனாகிய இராமபிரான் விசுவாமித்திரரோடு சென்று தாடகையை கொன்ற கதையும், அகலிகை சாபம் தீர்ந்த கதையும், சீதையை விவாகம் செய்த கதையும், இராவணனைக் கொன்ற கதையும், குசன் கதையும், பிறவும் சுருக்கமும் பெருக்கமுமாக சொல்லப்பட்டுள்ளது.

இக்கதைகளில் கற்கிபுராணம், கூர்மபுராணம் முதலிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கின்றன; இந்த ரகுவம்ச சரிதை வடமொழியில் எழுதப்பட்டது;
(Courtesy: A.Kumarasamy Pillai's Raghuvamsa Sarithamirtham)



No comments:

Post a Comment