Sunday, January 3, 2016

சிகரெட் பழக்கம்

"இந்த பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"
ஹூமெலின் சொன்னார், "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்சிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கிவிடும்."
"நான் தீக்குச்சியினால்தான்  சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும்போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில்தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை."
"ஒரு கோடை விடுமுறைக்காக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம். டொரென்றோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."
"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியே விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன்பின் நான் அதைத் தொடவே இல்லை. நான் பாக்கியசாலி."
"அதற்குப்பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?"
"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன், சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று, இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே, இன்னொரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்தபடியே இருக்கிறேன்".
(நன்றி: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் "திகடசக்கரம்" கதைத் தொகுப்பில் "குங்கிலியக் கலய நாயனார்" கதையில் ஒரு பகுதி இது)

 **

No comments:

Post a Comment