Monday, November 14, 2016

இருது சங்கார காவியம்:

இருது சங்கார காவியம்:
இருது சங்கார காவியம் என்பது வடமொழியில் காளிதாச மகாகவி இயற்றிய “இருது ஸம்ஹார” என்னும் சிறு காப்பியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த நூலாகும்; இருது ஸம்ஹார என்பது இருதுகளின் கூட்டம் என்று பொருள்படும்; இருது = பருவகாலம் (Season), ஸம்ஹார = கூட்டம்; ஸம்ஹார என்பது வடமொழி; இதைத் தமிழில் சங்காரம் என்று கூறலாம்; சங்காரம் என்னும் சொல் அழித்தல் என்னும் பொருளில் பெருமளவில் வழங்கப்படுகிறது; இங்கு கூட்டம், சமூகம் என்பதே பொருந்தும்; எனவே இருது சங்காரம் என்பது ஆறு பருங்களின் வர்ணனைகளும் ஒருங்கே அமைந்த நூல் எனப் பொருள்படும்; ஆறு இருதுகள்: இளவேனில் (வசந்த இருது, சித்திரை, வைகாசி), முதுவேனில் (கிரீஷ்ம இருது, ஆனி, ஆடி), கார் (வர்ஷ இருது, ஆவணி, புரட்டாசி), கூதிர் (சரத் இருது, மார்கழி, தை), பின்பனி (சிசிர இருது, மாசி, பங்குனி) என்பனவாகும்; இந்த ஆறு இருதுகளையும் கவி வர்ணித்திருக்கின்றார்; மகாகவி, கிரீஷ்ம இருதுவை முதலாகக் கொண்டு அவற்றை வருணனை செய்துள்ளார்;

இருது சங்காரம், காளிதாச கவி இளமையில் இயற்றிய காப்பியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்; காளிதாசன் இயற்றிய ஏனைய தலைசிறந்த காப்பியங்களாகிய  இரகுவம்சம், குமாரசம்பவம், சாகுந்தலம், மேகதூதம், என்பனவற்றில் காணப்படும் கற்பனைத் திறமும் சொல்லாட்சியும் பொருள் செறிவும் போன்ற கவிதைப் பண்புகள் இந்த நூலில் இல்லை என்பதே ஆதாரம் என்கின்றனர்;

காளிதாசன் இந்த நூலில் இயற்கை வர்ணனையோடு மக்களின் இதயத்து இயல்பாய் எழும் உணர்ச்சித் திறங்களையும் இயைபு பெற வருணனை செய்கின்றார்; இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து இயற்கை அழகைப் பருகித் திளைத்த இன்பம் இதயத்தில் கவிதையாகச் சுரந்து பெருகி உலகினரை இன்புறுத்தும் ஒப்பற்ற கலைப்பண்பு வாய்ந்தவர் காளிதாசன் என்னும் மகாகவி; இயற்கை ரகசியங்களை நுனித்து நோக்கும் ஆற்றலிலும் அதனை வளம்பெறப் பாடும் புலமையிலும் தலைசிறந்தவன் மகாகவி; இயற்கைத் தோற்றங்களை அப்படியே தத்ரூபமான சொல் ஓவியங்களாய்ச் சித்தரித்துக் காட்டுதலும், இயற்கை நிகழ்ச்சிகளால் மக்கள் உள்ளத்தில் விளையும் உணர்ச்சி வேகங்களை அவற்றோடு தொடர்புபடுத்தி அகப்பொருள் குறிப்புத் தோன்றக் கவிதை புனைதலுமே காளிதாசர் போன்ற பெரும் புலவர்களின் தனிப் பண்பாகும்; ஆகவே, மக்கள் வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்புபெற ஆக்கிய கவிதைகளே அமரத்துவம் பெறுவன என்பது வால்மீகி, காளிதாசர், திருவள்ளுவர், கம்பர் முதலிய அமரகவிகள் வாயிலா நாம் அறிய முடியும்;

ஒவ்வொரு பருவ காலத்திலும் இயற்கையன்னை அளிக்கும் காட்சிகளை வருணனை செய்தவற்கென்றே இலக்கிய உலகில் முதன்முதல் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்) எழுதப்பட்ட காவியம் இந்த இருது சங்காரமே எனலாம்; வடமொழிப் புலவர்கள் இயற்கை வருணனை பாடுங்கால் இருதுகளை ஆதாரமாகக் கொண்டு ஆறாக வகுத்து செய்யுள் செய்தவர்; தமிழ்ப் புலவர்கள், திணையை ஆதாரமாகக் கொண்டு ஐந்தாக வகுத்து செய்யுள் செய்வர்; இதுவே வேறுபாடு; அகம் என்பது சிருங்காரம் என்னும் காமச்சுவையாகும்; தமிழ்ப் புலவர்கள், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று ஐந்தாக வகுப்பர்; வடமொழிப் புலவர்கள், கூடுதல் (புணர்தல்), கூட்டம் பெறாமை என இரண்டாக வகுத்து, கூட்டம் பெறாமையுள், பிரிதல் முதலிய ஏனைய நான்கையும் அடக்குவர்; கூட்டம் பெறாமை என்பது பூர்வராகம், மானம், பிரவாகம், கருணம் என நான்கு வகைபடும் என்பர்; பூர்வாகம் என்பது தமிழில் கைக்கிளைத் தினை போன்றது; மானம் என்பது ஊடலையும், பிரவாகம் என்பது பிரிதலையும், இருத்தலையும், கருணம் என்பது இரங்கலையும் குறிப்பனவாம்;

இந்த நூலில் முதுவேனில் பருவ வருணனையை நோக்கினால், “சூரியன் மிக உக்கிரமாக எரித்தாலும், இரவு நிலாப் பொருந்திக் குளிர்ந்து இனித்தாலும், ஆடவரும் பெண்களும் வெம்மை தீரப் பலகால் பூஞ்சனையாடலும், காமவின்பம் கைம்மிகாது கட்டுப்படுதலும், செயற்கை நீர் அருவிகளும் பனிநீரும் சந்தனமும் நிலா முற்றமும் முத்துமாலையும் யாமத்து வீணை இன்னிசையையும் சங்கீதமும் என்பது இளம் காதலர்களுக்குத் தாபத்தைக் குறைத்து இன்பம் செய்தலும்; மகளிர் மென்பட்டாடை அணிதலும், விலங்கும் பறவையும் வெய்யிலின் வெப்பத்தினால் குளம் குட்டைகள் எல்லாம் நீர் வற்றிப் போக, விலங்கினம் மெலிந்து நீர்தேடி அலைதலையும்; காடெங்கும் காட்டுத்தீ  சுவாலை விட்டுப் பரவி மரம் செடி கொடிகளை எரித்தலும்; வெஞ்சுரத்துச் சென்றவன் பிரிவுத் துயராலும் வெப்பத்தாலும் தாபமுறுதலும்; இல்லத்தைப் பிரிந்து வழிசென்றோர் மாலை காலத்தையும் இளமங்கையரைக் கண்டு விரக முறதலும்; இளநங்கையர் பூந்தண் சுனையாடியும் வேனிலில் பூக்கும் பாதிரி மலர் மாலை அணிந்தும் இரவில் நிலா முற்றத்தில் இருந்து கீதவாத்திய கானம் செய்தும், வேனில் வெம்மையைப் போக்கி இன்புறுதலும் என்னும் பல செய்திகளை கவியாக வர்ணித்திருக்கிறார்;

தொல்காப்பியத்தில், “காலையும், மாலையும் நண்பகலன்ன கடுமை கூர, சோலை தேம்பி, கூவல் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம்பயன் துறந்து, புள்ளும், மாவும், புலம்புற்று, இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூராகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலும் சிறப்புடையதாயிற்று” என்கிறது;
மகாகவி, இருது சங்காரத்தில் ஆறு பருவங்களின் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு காதலன், தன் காதலியை விளித்துச் சொல்வதாக அமைத்துள்ளார்; ஒவ்வொரு சருக்கமும் அதில் வருணனை செய்யப்பட்ட இருது காதலிக்கு எல்லா நலன்களையும் நல்குக என வாழ்த்தும் ஒரு வாழ்த்துச் செய்யுளைக் கொண்டு முடியும்;

காளிதாசன், உவமை நலங்களையும், அரிய கற்பனைகளும், உருவகங்களும், தன்மை நவிற்சியும் என்னும் அழகுகள் பொலிந்து விளங்கி உள்ளார்;
(இருது சங்கார காவியம் என்னும் நூலில் யாழ்ப்பாணம் தி.சதாசிவ ஐயர் எழுதிய முன்னுரை இது: 1950ல் பதிப்பிக்கப்பட்ட நூல் இது)

**

No comments:

Post a Comment