Thursday, November 24, 2016

Hera ஹெரா (ராணிக் கடவுள்)

Hera ஹெரா (ராணிக் கடவுள்)
கிரேக்க இதிகாசத்தில் ஜீயஸ் கடவுள் தான், கடவுள்களுக்கு எல்லாம் தலைமைக் கடவுள் (சிவபெருமான் மாதிரி); கடவுள்களுக்கு ராஜாவான ஜீயஸ் கடவுளுக்கு முதல் மனைவிதான் இந்த ஹெரா என்ற பெண் கடவுள் (பார்வதி மாதிரி); ஹெராவை கடவுள்களின் ராணி என்பர்;

ஜீயஸ் கடவுள் இந்த பூமியையும், ஆகாயத்தையும் காக்கும் கடவுள் ஆவார்; அவரின் மனைவியான ஹெரா பூமியில் உள்ள பெண்களுக்கு கடவுள் ஆவார்; இவளுக்கு ஈரிஸ் கடவுள் ஒரு குழந்தை; ஈரிஸ் கடவுள் போர், சண்டைக்களுக்கான கடவுள்; மற்றொரு மகன் ஹிபீஸ்டஸ் (Hephaestus); இவன் நெருப்புக்கும், அதில் உருவாக்கும் பொருள்களுக்கும் கடவுள் ஆவான்; ஹெரா பெண்கடவுளுக்கு ஒரு மகளும் உண்டு; அவள் பெயர் இலித்தியா (Ilithyia); இந்த இலித்தியா குழந்தைப் பிறப்புக்கு உரிய கடவுள் ஆவாள்;

தலைமை கடவுளான ஜீயஸ் கடவுளின் மனைவியான ஹெரா ஒரு பேரழகி; அன்பானவள்; எனவே இவளைக் கடவுள்களின் ராணி என்பர்; கட்டுப்பாடு நிறைந்தவள்; இவள் அழகின் மீது இவளுக்கு ஒரு கர்வம் உண்டாம்!  ஏற்கனவே ஒரு அழகிப் போட்டியில் இவளையும், ஏதெனாவையும், அப்ரடைட்டியையும் போட்டிக்கு அழைத்து, அங்கு மனிதகுல ராணியான ஹெலனை “உலகப் பேரழகி” என்று தீர்ப்புச் சொல்லியதில், ஹெராவுக்கு மிகுந்த கோபம் உண்டானதாம்! இதை ஏற்பாடு செய்த ஒரு தேவதையை கொக்காக ஆகும்படி சபித்து விட்டாளாம்!

கடவுள்களின் ராஜாவான ஜீயஸ்-க்கு மனைவியாக இருப்பதால், இவளே மனிதர்களின் திருமணங்களுக்கு இவளே கடவுள் ஆவாள்; இவளது திருமண வாழ்க்கை அவ்வளவு இன்பமானதாக இல்லாமல் இருக்கிறதாம்! இருந்தாலும் இவளே திருமணங்களுக்கு கடவுள் ஆவாள்! இவளின் கணவனான ஜீயஸ் கடவுளுக்கு மற்ற பெண்களைக் கண்டால் ஆசை வந்துவிடுமாம்! அதனாலேயே அவன் மனைவி ஹெரா ராணி கடவுளுக்கு தான்தான் பெரியவள் என்ற கர்வமும் இருக்குமாம்!

ஜீயஸ் கடவுள் எங்கு செல்கிறார், எந்தப் பெண்ணைச் சந்திக்கிறார் என்று கண்காணிப்பதற்காக, ராணி கடவுளான ஹெரா ஒரு “ஆயிரம் கண்கள்” கொண்ட ஒரு அரக்கனான அர்கோஸ் என்பவனை ஜீயஸ் கடவுள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அனுப்பி வைப்பாளாம்; இதில் எரிச்சல் அடைந்த ஜீயஸ் கடவுள், தன் மகன் ஹெர்மிஸ் என்பவனைக் கூப்பிட்டு, அந்த அரக்கனைக் கொல்லுமாறு அனுப்பினாராம்; இந்த ஹெர்மிஸ்தான் பறக்கும் திறன் கொண்ட சிறுவனான கடவுள்; அவன், இந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை; அந்த அரக்கனின் ஏதாவது ஒரு கண் முழித்துக் கொண்டு இருக்கிறதாம்; எனவே இந்தச் சிறுவன் கடவுள், பாட்டுப்பாடி, அரக்கனின் ஆயிரம் கண்களையும் தூங்க வைத்துவிட்டு, அந்த அரக்கனை ஒரு வழியாகக் கொன்றானாம்!

இறந்த அரக்கனைப் பார்த்த, ஜீயஸ் கடவுளின் மனைவியான ஹெரா, அந்த இறந்த அரக்கனின் கண்களை பிடுங்கி எடுத்து, அதை மயில்களின் தோகையில் வைத்து விட்டாளாம்! அவள் அதில் ஏறிச் சுற்றி வருவாளாம்! கணவனைக் கண்காணிக்க இந்த மயிலின் கண்கள் உதவுகிறதாம்! (அந்த மயிலைத்தான் முருகன் வாங்கிக் கொண்டாரோ?); ஹெராவுக்கு மயில்கள் இல்லாமல், பசுமாடு, சிங்கம், சேவல் இவளைகளும் பிடிக்குமாம்; அவைகளையும் அவ்வப்போது உபயோகித்துக் கொள்வாளாம்!

மனைவியின் பார்வையில் இருந்து தப்பிக்க வழிதெரியாத ராஜா கடவுளான ஜீயஸ், ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்; ஒரு ஆவிக் கடவுளான இளம் பெண்ணான எக்கோ பெண் கடவுளிடம் ஒரு உதவியைக் கேட்கிறார் ஜீயஸ் கடவுள்; தன் மனைவி ஹெராவுக்கு கதைகள் சொல்லும்படி கேட்டாராம்! இந்த இளம் பெண் கடவுளும், ஹெராவுக்கு பிடித்த கதைகளை நாள்முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்குமாம்! அப்படி கதை கேட்கும்போது, ஹெரா, தன் கணவனை கண்காணிக்க மறந்து விடுவாளாம்! அந்த சந்தர்பத்தில், ஜீயஸ் கடவுள் ஊர் சுற்ற போய் விடுவாராம்! இந்த விஷயத்தை பின்னர் தெரிந்து கொண்ட ஹெரா ராணிக் கடவுளுக்கு எக்கோ மீது கோபம் வந்ததாம்! கோபத்தில், “இனி உனக்கு கதை சொல்லும் திறமையே இல்லாமல் போகக்கடவது” என்று சாபம் கொடுத்து விட்டாளாம்! அதற்குப் பின்னர், எக்கோவுக்கு அந்த திறமையே போய் விட்டதாம்! யாராவது ஏதாவது சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும் திறமை மட்டுமே எக்கோவுக்கு இப்போது இருக்கிறதாம்! கவலையில் எக்கோ, மறைந்து ஒரு மலையில் போய்ச் சேர்ந்து விட்டாளாம்; அதற்குப்பின்னர் யாராவது மலைக்கு பக்கத்தில் நின்று கொண்டு எதையாவது சத்தமாகச் சொன்னால் ,அதை மட்டும் திருப்பிச் சொல்வாளாம்; (எக்கோ கடவுள் பெயரில்தான் எக்கோ என்னும் எதிரொலி உண்டானதோ?);
**


No comments:

Post a Comment