Friday, December 23, 2016

“மான் அன்ன நோக்கி பங்கன்”

“மான் அன்ன நோக்கி பங்கன்”
மான் போன்ற பார்வையை உடைய உமையம்மையை தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கும்  சிவபெருமானே என்று திருஅருட்பாவில் ஒரு குறிப்பு வருகிறது;

பொதுவாக, கணவன், தன் மனைவியை, தனக்கு இடப்பக்கத்தில் வைத்துக் கொள்வான்; கணவனின் இடப்பக்கம் இதயம் உள்ளது; தன் இதயத்தில் வைத்து பாதுகாக்கிறான் என்ற பொருளில், தன் மனைவியை அவனின் இடப்பக்கம் வைத்துக் கொள்கிறான்;

இப்படியே, கடவுள் சிவனும் தன் மனைவி உமையை இடப்பக்கமே வைத்துக் கொள்கிறான்;

ஆனால், முருகப் பெருமானுக்கோ இரண்டு மனைவிகள்; தெய்வானை, வள்ளி என இருவர்; தெய்வானை என்ற பெண், தேவேந்திரனின் மகள்; தெய்வப் பெண்; அவளைத்தான், முருகன் முதலில் திருமணம் செய்து கொண்டான்; தேவேந்திரனின் துயர் தீர்த்ததால், முருகனுக்கு தெய்வானையை பரிசாக மனைவியாக கொடுத்தான் தேவேந்திரன்; எனவே முதல் மனைவி தெய்வானைதான்;

முருகனின் அடுத்த மனைவி வள்ளியம்மை; இவள் மண்ணுலக மங்கை; பூமியில் முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்தது; பல தில்லுமுல்லுகள் செய்து வள்ளியைக் கரம் பிடிக்கிறான்;
முருகனின் திருவுருப் படங்களை பார்த்தால், முருகனின் இடப்பக்கம் இருப்பவர் தெய்வானையே! முருகனின் வலப்பக்கம் இருப்பவர் வள்ளியம்மையே!
**

திருமணங்களில் மொத்தம் எட்டு வகை உள்ளது;
இந்த மண்ணுலகில் சம்ஹார வாழ்க்கையில் வாழ விரும்புபவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; மற்றவர்கள் நிரந்தர பிரம்மச்சாரியம் அல்லது சன்யாசி வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறது இந்து தர்மம்;
திருமணங்களை, சாஸ்திர முறைப்படி நடக்கும்  திருமணங்கள், பழக்க வழக்கங்களின்படி நடக்கும் திருமணங்கள், சட்ட முறைப்படி நடக்கும் திருமணங்கள் என மூன்று பிரிவாக கொள்ளலாம்;
பழங்கால இந்துமத தர்மப்படி, திருமணங்களை எட்டு வகையாகச் சொல்வர்;
1)      பிரம்ம விவாகம்
2)      தெய்வ விவாகம்
3)      அர்ஷ விவாகம்
4)      பிரஜாபதி விகாகம்
5)      அசுர விவாகம்
6)      கந்தர்வ விவாகம்
7)      ராட்சச விவாகம்
8)      பைசாச விவாகம்
பிரம்ம விவாகத்தில், ஒரு வேதம் படித்த பண்டிதனுக்கு தன் பெண்ணை பரிசுப் பொருள்களுடன் விவாகம் செய்து கொடுப்பது;
தெய்வ விவாகம் என்பது, தன்னை கடவுள் பணிக்காக அர்பணித்துக் கொண்ட ஒரு இளைஞனுக்கு, தன் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பது;
அர்ஷ விவாகம் என்பது இளைஞனிடமிருந்து ஒரு ஜோடி கால்நடையைப் பெற்றுக் கொண்டு, தன் பெண்ணை அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுப்பது.
பிரஜாபத்ய விவாகம் என்பது தன் பெண்ணை ஒரு இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது, “நீங்கள் இருவரும் இணை பிரியாமல் வாழ்வீர்களாக, அவ்வாறே வாழ்ந்து, இம் மண்ணுல கடமைகளை நிறைவேற்றுவீர்களாக!” என வாழ்த்தி பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது;
மேற்சொன்ன நான்கு திருமணங்களையும் இந்து தர்மம் அங்கீகரிக்கிறது;
அடுத்த நான்கு திருமணங்களை அங்கீகரிக்கவில்லை; ஆனால் சில சூழ்நிலைகளில் ஏற்றுக் கொள்கிறது;
காந்தர்வ விவாகம் என்பது இளைஞனும், இளம் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் சம்மதித்து திருமணம் செய்து கொள்வது.
அசுர விவாகம் என்பது பெண்ணின் தகப்பனார், இளைஞனிடமிருந்து “சுல்கா” என்னும் பொருள்/பணத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பது;
ராட்சச விவாகம் என்பது பெண்ணை, பல வழிமுறைகளை மேற்கொண்டு, கவர்ந்து சென்று, அவளைத் திருமணம் செய்து கொள்வது;
பைசாச விவாகம் என்பது ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல், அல்லது மோசடியாக புணர்ந்து, அதனால் அவளைத் திருமணம் செய்து கொள்வது;
**
இந்த எட்டுவகைகளில், முருகன், தெய்வயானை என்ற மங்கையை (தேவேந்திரன் மகளை) திருமணம் செய்தது, முதல் வகையான “பிரம்ம விவாகம்” ஆக இருக்கலாம்;
முருகன், வள்ளியம்மையை திருமணம் செய்தது, காந்தர்வ விவாகமாக இருக்கலாம்; ஆனால் கதைகளில் அவன் செய்யும் லீலைகளைப் பார்த்தால், அது, ராட்சச விவாகமாக இருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது;
**


No comments:

Post a Comment